செந்தமிழ்சிற்பிகள்

'தமிழ்த்தாத்தா' உ.வே.சாமிநாதர் (1855 – 1942)

'தமிழ்த்தாத்தா' உ.வே.சாமிநாதர் (1855 – 1942)

அறிமுகம் 

தமிழ்ப் பதிப்பியக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான உ.வே.சாமிநாதர் 1855 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி பாபநாசம்,உத்தமதானபுரம் எனும் ஊரில் பிறந்தார். வெங்கட்ராமன் என்பது இவரது இயற்பெயர் . இவரது தாயார் சாமிநாதன் என்ற செல்ல பெயரால் அழைக்க, பின்னர்  அதுவே நிலைத்து விட்டது. 

இவர் குடும்பம் வசதியில்லாமல் ஊர்ஊராக இடம் பெயர்ந்து வாய்ப்புகளை தேடியலைந்த போதும் , மனம் தளராமல் சடகோப ஐயங்கார் மற்றும் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஆகியோரிடம் விடாமுயற்சியுடன் தமிழ் கற்று தமிழறிஞர் ஆனார்  உ. வே. சா.

தமிழ் மற்றும் சமுதாயப் பணி 

  • 1880 ஆம் ஆண்டு முதல்  கும்பகோணம் கல்லூரியில் தொடர்ந்து 23 ஆண்டுகளும்  பின்பு 1903 ஆம் ஆண்டு முதல் சென்னை மாநிலக் கல்லூரியில் 16 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார். 1924 ஆம் ஆண்டு மீனாட்சி தமிழ்க் கல்லூரியின் முதல்வரானார். 
  • அழிந்துக் கொண்டிருந்த சங்ககால நூல்களை, ஓலைச்சுவடிகளாக இருந்தவற்றை தேடித்தேடி கண்டறிந்து,அதில்  சிதைந்து மறைந்து விட்ட அடிகளையும் சொற்களையும் ஆராய்ந்தறிந்து  முழுப்பொருள் விளங்கும் படி  அதை பதிப்பித்தார். 
  • 3000-க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.

படைப்புகள் 

  • உ. வே. சா. அவரது 23 ம் வயதிலேயே ஆதீனம் பெரிய காறுபாறு  வேணுவனலிங்க சுவாமிகள் இயற்றியிருந்த 'தேசிக விலாசச் சிறப்பு'; 'வேணுவனலிங்க விலாசச்  சிறப்பு' என்னும் நூலை பதிப்பித்து வெளியிட்டார்.
  • விரிவான முன்னுரை, நூலாசிரியர் உரையாசிரியர் வரலாறு, கதைச் சுருக்கம் ஆகியவற்றுடன் முதல் பதிப்பு முயற்சியாக  அக்டோபர் 1887இல் சீவக சிந்தாமணியைப் பதிப்பித்தார்.
  • சங்க இலக்கியம் , 12 புராணங்கள் ,9 உலா நூல்கள், 6 தூது நூல்கள், 3 வெண்பா நூல்கள் ,4 அந்தாதி நூல்கள், 2 பரணி நூல்கள் ,2 மும்மணிக் கோவை ,2 இரட்டை மணி மாலை,அங்கயற்கண்ணி மாலை மற்றும் 4 சிற்றிலக்கியம் உள்ளிட்ட  பலவகைப்பட்ட 90 க்கு மேற்பட்ட ஓலைச்சுவடிகளுக்கு நூல்வடிவம் தந்துள்ளார்.  
  • கலைமகள் துதி , திருலோக மாலை, ஆனந்த வல்லியம்மை பஞ்சரத்னம்  போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார். புதியதும் பழையதும், நல்லுரைக் கோவை போன்ற உரைநடை நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்,
  • சென்னைப் பல்கலைக்கழகத்தில் உ.வே.சா ஆற்றிய சொற்பொழிவே ‘சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும்’ எனும் நூலாக வெளியிடப்பட்டது.
  • மீனாட்சிசுந்தரம், மகாவைத்தியநாதர், கோபால கிருஷ்ண பாரதி, உள்ளிட்ட பல தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
  • 'என் சரித்திரம்' எனும் தலைப்பில் ஆனந்த விகடன் வார இதழில் 1940 முதல் 1942 வரை தொடராக, தனது வாழ்க்கை வரலாற்றை,   உ. வே. சா. அவர்கள் எழுதி வந்தார். இது புத்தகமாக 1950 ஆம் ஆண்டில் வெளி வந்தது.

விருதுகள் /சிறப்புகள் 

  • மகாமகோபாத்தியாய(1906), தக்ஷிணாத்ய கலாநிதி, திராவிட வித்யாபூஷணம் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். 
  • 1932-ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் 'முனைவர்' பட்டம் வழங்கி கௌரவித்தது . 
  • தமிழ்மொழிக்குச் செய்த தொண்டினால் ‘தமிழ்த்தாத்தா’ என மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார். 
  • 1937-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டில்  இவரது உரையை கேட்ட மகாத்மா 'இவரிடம் நான் தமிழ் கற்க வேண்டுமென்ற ஆர்வமிகுதி தான் என்னிடம் எழுகிறது "-என்றார்.
  • இந்திய அரசு பிப்ரவரி 18, 2006 ம் ஆண்டு இவரது நினைவு அஞ்சல் தலை-யை வெளியிட்டது .
  • உத்தமதானபுரத்தில்  உ. வே. சா வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசால் ‘உ. வே. சா நினைவு இல்லம்’-ஆக பராமரிக்கப்பட்டு வருகிறது .
  • ருக்மணி அருண்டேல் உதவியுடன்  1943-ம் ஆண்டு ' டாக்டர் உ.வே.சாமிநாதர் நூல் நிலையம்’ சென்னை பெசன்ட் நகரில் அமைக்கப்பட்டுள்ளது.
  • தமிழுக்கு வளம் சேர்க்கும் தமிழறிஞர்களின் சேவைகளைப் பாராட்டும் விதமாக உ.வே.சா. விருது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படுகிறது.